Thursday, December 4, 2014

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவரை ஏன் கைது செய்ய கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் 15 கேள்விகள்
 

Advertisement

மாற்றம் செய்த நாள்

04டிச
2014 
00:18
பதிவு செய்த நாள்
டிச 03,2014 23:56
சென்னை: மதுவினால் விளையும் தீமைகளில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்க, பூரண மதுவிலக்கு அமல்படுத்துவதை, மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கவில்லை என்பது உட்பட, 15 கேள்விகளை என, சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பி உள்ளது.
சென்னை அடையாறு எல்.பி.சாலை சந்திப்பில், மோட்டார் சைக்கிளில் சென்ற ராம்குமார், அருண்குமார் பஸ் மோதியதில் பலியாகினர். 2011ல், சம்பவம் நடந்தது.மதுபானம் குடித்து விட்டு, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததால், கட்டுப்பாட்டை இழந்தனர் என, போக்குவரத்துக் கழகம் தரப்பில் வாதிடப்பட்டது. வாகனத்தை ஓட்டியவர், மதுபானம் குடித்திருந்தார் எனக்கூறிய தீர்ப்பாயம், இருவரின் குடும்பத்துக்கும், முறையே, 9.25 லட்சம் ரூபாய், 11.34 லட்சம் ரூபாய் என, இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.தீர்ப்பாயம் உத்தரவிட்ட இழப்பீடு, போதுமானதாக இல்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இருவரது குடும்பத்தினரும், அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தன. நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு:மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால், உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அந்தப் பிரச்னையை முதலில் ஆராய வேண்டும். விபத்துகளுக்கு மூல காரணமாக, மது விளங்குகிறது.நம் நாட்டில் பல பகுதிகளில், தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆனால், இந்த தண்ணீர் (மது) மட்டும், மூலை முடுக்கெல்லாம் ஓடுகிறது. அதில், பல குடும்பங்கள் மூழ்குகின்றன. மது, ஒரு விஷம். பல்வேறு சமூக தீங்குகளுக்கு, இதுவே அடிப்படை.இருந்தாலும், வருமானம் பெறும் நோக்கில், மதுபான கடைகள், 'பார்'களை, அரசு திறந்து வருகிறது. தமிழகத்தில், 6,850 மதுபான கடைகள் உள்ளன. இதன் மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் கிடைக்கிறது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால், விலை மதிக்க முடியாத, இரண்டு உயிர்கள் இழக்கப்பட்டது. ஆண்டுதோறும், குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதன் மூலம், நூற்றுக்கணக்கான பேர் இறக்கின்றனர்.கடந்த ஆண்டு, தமிழகத்தில், குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக, 2,764 சம்பவங்கள் நடந்தன. அவற்றில், 718 பேர் இறந்தனர். 2,957 பேர் காயமடைந்தனர்.மதுவிலக்கு இல்லாத வரை, மது குடிப்பதற்கு தடையில்லை; மதுபானங்களை வாங்கி, வீட்டில் வைத்து குடிக்கலாம்; குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதால், அவர்களது உயிருக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களின் உயிருக்கும், ஆபத்தை விளைவிக்கின்றனர்.குடியால், குடும்பங்கள் சிதைந்துள்ளன. இளைஞர்கள் குடிக்கு அடிமையாகின்றனர். அரசு ஊழியர்கள் சிலர் குடித்து விட்டு, பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் வழக்குகள், சரிவர பதிவு செய்வதில்லை.இந்த வழக்கில், மத்திய அரசு, மாநில வருவாய் துறை செயலர், 'டாஸ்மாக்' நிர்வாக இயக்குனர், டி.ஜி.பி., ஆகியோரை சேர்க்கிறேன்.இவர்கள், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.1. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதற்கு, மோட்டார் வாகன சட்டம் தடை விதிக்கிறது. குடிப்பதற்கு ஏதுவாக, மதுபான கடைகள், 'பார்'களை, மாநில அரசு எப்படி திறக்கலாம்?2. மதுபான கடைகள், 'பார்'களை அனுமதிக்கும், கொள்கை முடிவானது, உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும், அரசியலமைப்பு சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தை மீறுவதாக இல்லையா?3. மதுவினால் விளையும் தீங்கில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்க, பூரண மதுவிலக்கை அமல்படுத்த, மத்திய, மாநில அரசுகள், ஏன் பரிசீலிக்கவில்லை?4. மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக, வருமானம் கிடைக்கும் மாற்று வழியை, அரசு ஏன் கண்டுபிடிக்கவில்லை?5. மதுபானம் குடிப்பதன் மூலம் விளைவிக்கப்படும் குற்றங்கள் குறித்த விவரங்கள், அவ்வப்போது திரட்டப்படுகிறதா; ஆவணப்படுத்தப்படுகிறதா?6. இளைஞர்கள், குடிக்கு அடிமையாவதால், மதுவினால் விளையும் தீமைகள் குறித்து, பள்ளிகளில் பாடம் புகட்ட தேவையில்லையா?7. பணிக்கு வரும் ஊழியர்கள், குடித்து விட்டு வருவதாக புகார்கள் வருவதால், அவர்களை அரசு ஏன் பரிசோதிக்கக் கூடாது. குடித்து விட்டு வந்தால், அவர்களை அனுமதிக்காமல், துறை நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது?8. மதுபானம் குடிப்பதை, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு, முக்கிய பிரமுகர்களை கொண்டு, பிரசாரம் மேற்கொள்ள, ஏன் அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது?9. கூடுதலாக, ஏன் கவுன்சிலிங் மையங்களை ஏற்படுத்தக் கூடாது?10. விபத்துகளை தடுக்க, 'பார்'களையாவது ஏன் மூடக் கூடாது?11. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை, ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக்க, மத்திய அரசு, சட்டத்திருத்தம் ஏன் கொண்டு வரக்கூடாது?12. குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க, அனைத்து சாலைகளிலும், குறிப்பாக நெடுஞ்சாலைகளில், தினசரி ஏன் சோதனை மேற்கொள்ளக் கூடாது?13. நெடுஞ்சாலைகளில், நடமாடும் பரிசோதனைக் கூடங்கள், நீதிமன்றங்கள் ஏற்படுத்தி, வழக்கை விரைந்து ஏன் முடிக்கக் கூடாது?14. அபராதம் விதிப்பதற்கு பதில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை, போலீசார் ஏன் கைது செய்யக் கூடாது?15. இடைக்கால நடவடிக்கையாக, மதுபான கடைகள், 'பார்'கள் இயங்கும் நேரத்தை, எட்டு மணி நேரமாக, ஏன் குறைக்கக் கூடாது?மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால், தமிழக அரசு சார்பில், கூடுதல் அரசு பிளீடர் தனபாலன், 'டாஸ்மாக்' சார்பில், வழக்கறிஞர் முத்துராஜ், 'நோட்டீஸ்' பெற்று கொண்டனர்.வரும் 11ம் தேதிக்குள், இவர்கள் பதிலளிக்க வேண்டும். விசாரணை, 11ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment