லஞ்சம் லஞ்சம் லஞ்சம் இவை எப்போது மாறும்?
ஊருக்கு ஒரு ரேட்டு; டிரான்ஸ்பருக்கு நோட்டு: பதிவுத்துறையில் போட்டி போட்டு லஞ்சம்.
மாற்றம் செய்த நாள்
20
ஜூன்
2014
04:03
பதிவு செய்த நாள்
ஜூன் 19,2014 23:52
தமிழக பதிவுத்துறையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இருந்த பொது மாறுதலை,
ஆண்டுக்கொரு முறையாக மாற்றியதன் எதிரொலியாக, லஞ்சத்தின் அளவு பல மடங்கு
அதிகரித்துள்ளது.தமிழக பதிவுத்துறையில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை
மட்டுமே, சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் மாற்றப்படுவது
வழக்கம். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அமைச்சர் மாறும்போதெல்லாம் பொது
மாறுதல் நடக்கிறது. கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பி.வி.சண்முகம்,
ரமணா, எம்.சி.சம்பத் என, இத்துறை, இதுவரை, மூன்றாண்டுகளில் 5 அமைச்சர்களை
சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறை அமைச்சர் மாறும்போதும், முதல் வேலையாகச்
செய்வது, சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்டப்பதிவாளர்களை தூக்கி அடிப்பது
தான். ஒவ்வொரு மாறுதலின் போதும், மாறுதலுக்கான 'தொகை'யும் அதிகமாகி
விடுவதாக சொல்லப்படுகிறது. பணம் கொடுத்து மாறுதல் வாங்குவோர், குறுகிய
காலத்தில், 'போட்ட காசை' எடுப்பதற்கு, மக்களையும், பத்திர எழுத்தர்களையும்
பிழிகின்றனர். பதிவுத்துறையில் 10 டி.ஐ.ஜி., 12 ஏ ஐ.ஜி., 50
மாவட்டப்பதிவாளர் மற்றும் 575 சார்பதிவாளர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில்,
அதிக வருவாயுள்ள இடங்களுக்கு பணி மாறுதல் பெறுவதற்கு, 15லிருந்து 25 லட்ச
ரூபாய் வரையும், மாவட்டப் பதிவாளர் பணியிடத்துக்கு 20லிருந்து 30 லட்ச
ரூபாய் வரையும், தர வேண்டியிருப்பதாக, பதிவுத்துறை வட்டாரங்கள் 'கணக்கு'
சொல்கின்றன. மதிப்பு நிர்ணயம் செய்யும் உரிமை, சார்பதிவாளரிடமிருந்து
மாவட்டப்பதிவாளருக்கு மாறிய பின், 'வளம் கொழிக்கும் பதவி'யாக
மாறிவிட்டதால், இந்த தொகை இன்னும் அதிகரித்துள்ளது. சமீபத்தில்,
இத்துறையின் அமைச்சர் மாறியதன் எதிரொலியாக, கடந்த ஆண்டில், 'பெரும்தொகை'
கொடுத்து மாறுதல் வாங்கிய அனைவரிடமும், இந்த ஆண்டிலும் அதே தொகையைத்
தருமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாக தகவல் பரவியுள்ளது. தொகையை வாங்குவோர்,
இதற்குச்சொல்லும் கணக்கு, மிரள வைப்பதாகவுள்ளது; ஆண்டுக்கு 5 ஆயிரம்
பதிவுகள் நடக்கும் ஓர் அலுவலகத்தில், ஒரு பதிவுக்கு 2 ஆயிரம் வீதமாகக்
கணக்கிட்டால், ஆண்டுக்கு ஒரு சார்பதிவாளருக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம்
கிடைக்கிறது; இதில், தங்களுக்குக் கொடுத்தது, 15 லிருந்து 25
லட்சத்துக்குள் மட்டுமே; அதனால் தான், ஆண்டுக்கு ஒரு முறை இந்த தொகையை
வசூலிக்கிறோம் என்பதே இவர்கள் சொல்லும் கணக்கு. ஆனால், இந்த அளவுக்கு
வருவாய் கிடைப்பதில்லை என்பது சார்பதிவாளர்களின் வருத்தம். ஆண்டுக்கு 5
ஆயிரம் பதிவுகள் வந்தாலும், 2 ஆயிரம் பதிவுகளுக்கு மட்டுமே, 2 ஆயிரம்
ரூபாய் கிடைக்கும். மற்றவற்றுக்கு, குறைவாகவே கிடைக்கும். அதனால்,
கிடைக்கும் லஞ்சத்தில் பெரும் தொகையை திருப்பித் 'தர வேண்டியிருக்கிறது'
என்று, ஏதோ உழைத்துச் சம்பாதித்ததைப் பறித்ததுபோல, கொஞ்சமும் கூச்சமின்றி
புலம்புகின்றனர் 'லஞ்ச' அலுவலர்கள்.இதில் கொடுமை என்னவென்றால்,
தற்போதுள்ள பதிவுத்துறை தலைவர் முருகையன், நேர்மைக்கு பெயர் பெற்றவர்
என்பது தான். தமிழகம் முழுவதும் அவ்வப்போது அதிரடி சோதனை செய்து,
பதிவுத்துறை அலுவலர்களைக் கலங்கடிக்கும் இவரால் கூட, அதிகளவு லஞ்சப்
புகாருக்கு உள்ளாகும் சார்பதிவாளரைக் கூட மாற்ற முடிவதில்லை.
ஏற்கனவே,
லே-அவுட் மற்றும் கட்டிட அனுமதிக்கான லஞ்சம் பல மடங்கு அதிகரித்திருக்கும்
நிலையில், பதிவுத் துறையிலும் லஞ்சம் அதிகரிப்பது, நில மதிப்பு,
கட்டுமானச் செலவு ஆகியவற்றையும், அதன் தொடர்ச்சியாக வீட்டு வாடகையையும்
எகிற வைக்கிறது; இதனால், ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு, அரசின் மீதான
அதிருப்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Source By: Dhinamalar.
No comments:
Post a Comment