Sunday, July 5, 2015

அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்தார் கோவை சாருஸ்ரீ

First Published : 05 July 2015 12:07 AM IST
இந்திய குடிமைப்பணித் தேர்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த டி.சாருஸ்ரீ அகில இந்திய அளவில் ஆறாவது இடமும் தமிழகத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த கார் டிரைவரின் மகள் சி.வான்மதி, இத்தேர்வில் 152-ஆவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
2014-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சனிக்கிழமை வெளியிட்டது. இந்தத் தேர்வில் தமிழகத்திலிருந்து 118 பேர் உள்பட மொத்தம் 1,236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை சாருஸ்ரீ: இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாமிடம் பெற்ற சாருஸ்ரீ கோவையைச் சேர்ந்தவர். இந்திய வனத் துறைப் பணி பயிற்சிக்காக டேராடூன் சென்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக அவர் கூறியது:
நான் சென்னை அண்ணா பல்கலைக்கழக்தில் இ.சி.இ. பிரிவில் 2012-ஆம் ஆண்டு பட்டம் பெற்றேன். படிப்பு முடித்ததும் குவால்கம் என்ற நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டே, கிடைத்த நேரத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகப் படித்து வந்தேன். முதல் முயற்சியில் சுங்கத் துறை அதிகாரி பணி கிடைத்தது. அதன் பிறகு, வனத்துறை அதிகாரி தேர்வில் வெற்றி பெற்றதும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயிற்சியில் இணைந்தேன்.
இப்போது, எனது இரண்டாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி கிடைத்துள்ளது. கல்வித் துறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறேன். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றார். இவரது தந்தை தியாகராஜன், வேளாண் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் குமுதா.
சென்னை மெர்சி ரம்யா: சென்னையைச் சேர்ந்த மெர்சி ரம்யா இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் 32-வது ரேங்க் பிடித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியது:
பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பிறகு குடிமையியல் தேர்வுகளை எழுதி வந்தேன். இது எனது மூன்றாவது முயற்சி. இந்த முறை வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், பெண் கல்வியிலும் கவனம் செலுத்துவேன் என்றார்.
இவரது தந்தை ஐசக் சாமுவேல் வழக்குரைஞராக உள்ளார். தாயார் பொன்முடி சுடரொளி.
சத்தியமங்கலம் வான்மதி: இந்தத் தேர்வில் 152-ஆவது இடத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக சி.வான்மதி கூறியது:
எனது தந்தை சிறிய நிறுவனத்தில் கார் டிரைவாகப் பணிபுரிந்து வந்தார். படிக்கும்போது எங்களுக்கு குடிசை வீடுதான் இருந்தது. அந்த நிலையிலிருந்து குடும்ப நிலையை மாற்ற வேண்டுமானால் கல்வியால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையுடன் படித்தேன். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில்தான் படித்தேன்.
பி.எஸ்சி. கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும், பகுதிநேரமாக எம்.சி.ஏ.வும் முடித்தேன். 2010-ஆம் ஆண்டிலிருந்து குடிமைப்பணித் தேர்வு எழுதி வருகிறேன். முதல் முயற்சியில் நேர்முகத் தேர்வில் வெற்றி கை நழுவியது. இப்போது 4-வது முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. மாணவர்களும், இளைஞர்களும் தங்களது இலக்கை தெளிவாக நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
மக்களுக்கான சேவைகளை விரைந்து கிடைக்கச் செய்வதே எனது நோக்கம். குறிப்பாக, அரசு சேவைகளை டிஜிட்டல்மயமாக்குவதில் கவனம் செலுத்துவேன் என்றார். இப்போது ஈரோடு மாவட்டம், நம்பியூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி மேலாளராக இவர் இருக்கிறார். இவரது தந்தை சென்னியப்பன், தாய் சுப்புலட்சுமி. இவர்கள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.அருண்ராஜ் 34-ஆவது இடத்தையும், டி.எஸ்.விவேகானந்த் 39-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
புவியியல் பாடம் காரணமா? இந்த ஆண்டு இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் புவியியல் பாடத்தைத் தேர்வு செய்தவர்கள் அதிகமாக உள்ளனர். சாருஸ்ரீ, மெர்சி ரம்யா உள்ளிட்டோர் புவியியலை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்தவர்கள்.
இதுகுறித்து மெர்சி ரம்யா கூறும்போது, கடந்த சில ஆண்டுகளில் புவியியல் பாடம் எழுதிய யாரும் தேர்வாகவில்லை. இந்த முறை புவியியல் பாடம் சற்று எளிமையாக இருந்தது காரணமாக இருக்கலாம். அடுத்த ஆண்டு வேறு பாடம் எளிமையாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment