Thursday, April 9, 2015

வங்கியிலும் பணத்திற்கு பாதுகாப்பில்லை: 27 ஆயிரம் கோடி ரூபாய் 'அம்பேல்'
Advertisement
புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்து 27 ஆயிரம் கோடி ரூபாய் மாயமான அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.வங்கிகளில் ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்ததால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

அனைத்து வங்கிகளுக்கும் மோசடி மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுப்பது குறித்த வழி முறைகள் கடந்த 2012ம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை கேட்டு, போன் வந்தால் உடனே வங்கிக் கிளையை அணுக வேண்டும் என்றும் கணக்கு குறித்த தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) மூலம் வங்கிகள் வாடிக்கையாளர்களை பலமுறை எச்சரித்துள்ளன. இந்த குறுஞ்செய்தியை பார்த்த பிறகும் வாடிக்கையாளர்கள் கவனக்குறைவாக இருப்பதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஏறக்குறைய 11,500 புகார்கள் வந்துள்ளன. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கில் இருந்தால், இத்தகைய மோசடிகள் நடக்கின்றன. ஆன் - லைனில் வங்கிக் கணக்குகளை இயக்கும் வாடிக்கையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பத்தை மோசடியாளர்கள் தவறாக பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 24 ஆயிரம் கோடியும், தனியார் வங்கிகளில் 3,000 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மோசடி குறித்து, அனைத்து வங்கிகளைச் சேர்ந்த 7,000 ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மோசடிக்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், பாண்டாவைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரான சந்தோஷ் தாந்தரியா கடந்த மார்ச் 16ம் தேதி தன் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தினார்; இதற்கான குறுஞ்செய்தியும் அவரது மொபைல் போனுக்கு வந்தது. ஆனால், மாலையில், வங்கியில் இருந்து வந்த மற்றொரு குறுஞ்செய்தியில் பணம் செலுத்தப்படவில்லை என்று வந்தது. இதுகுறித்து வங்கிக் கிளைக்கு சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசாரிடம் புகார் அளித்தும் இதுவரை அவரது பணம் கிடைக்கவில்லை. அதே போன்று, செய்தியாளரும் புற்றுநோயாளியுமான நாகார்ஜுன் கோபுலா, 32, என்பவரது கணக்கில் அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக அளித்த 1.23 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 3ம் தேதி வங்கி யில் இருந்து அவரது கணக்கு விவரங்களைக் கேட்டு போன் வந்துள்ளது. அனைத்து தகவல்களையும் கூறிய பிறகு அவரது கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கிலும் பணம் கிடைக்கவில்லை.
Source By : Dhinamalar

No comments:

Post a Comment