Friday, January 30, 2015

இப்படியும் நடக்குது மோசடி: மொபைல்போன் அழைப்புகளால் ஏமாறும் மக்கள்
Advertisement

பதிவு செய்த நாள்


30
ஜன
2015 
00:12


உங்களது மொபைல் எண், குலுக்கல் முறையில் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி, பண மோசடி செய்வது, அதிகரித்துள்ளது. இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்படுவோர், தபால் நிலையங்களுக்கு அலையும் பரிதாபமும் தொடர்ந்து வருகிறது.

மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, முன் பின் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து, அழைப்புகள் அல்லது, எஸ்.எம்.எஸ்., மூலம், 'உங்களது மொபைல் எண், பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது' என்ற தகவல் வருகிறது. மொபைல் போனில் பேசும் ஆண் அல்லது பெண், 'நாங்கள் பிரபல நிறுவனத்தின் டில்லி கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். லட்சம் எண்களில் ஒன்றாக, உங்களது மொபைல் எண், பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பரிசு, நான்கு கிராம் தங்க நாணயம். அதை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம். அருகிலுள்ள தபால் நிலையத்தில் சென்று, உங்களுக்கான பரிசுப்பெட்டியை, 3 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்' என்று கூறுகின்றனர். இதேபோல், எஸ்.எம்.எஸ்., மூலமும் தகவல் தருகின்றனர். விவரம் அறிந்த, பெரும்பாலானோர், இந்த அழைப்புகளையும், எஸ்.எம்.எஸ்.,களையும் உதாசீனப்படுத்தி விடுகின்றனர். ஆனால், பரிசுக்கு ஆசைப்படும் சிலர், தபால் நிலையத்துக்கு சென்று, பணம் செலுத்தி விட்டு, கடைசியில் ஏமாற்றம் அடைகின்றனர்.

கோவை வட்டாரத்திலுள்ள தபால் நிலையங்களுக்கு மட்டும், தினமும், 50க்கும் மேற்பட்டோர் சென்று ஏமாறுவதாக, தபால் அலுவலர்கள் கூறுகின்றனர். வி.பி.பி., சேவையை பயன்படுத்தும் 'டெலி மார்க்கெட்டிங்' நிறுவனங்களே, இந்த மோசடியை அதிகம் செய்கின்றன. டில்லி, மும்பை உள்ளிட்ட வட மாநில நகரங்களில் இருந்தே இத்தகைய மோசடி அதிகம் நடக்கிறது. ஸ்மார்ட்போன், தங்க நாணயம், தங்கச்சிலை போன்ற கவர்ந்திழுக்கும் பரிசுகளாலும், தபால் துறை மீதுள்ள நம்பிக்கையாலும், பலரும் பணத்தை செலுத்தி பார்சல்களை வாங்கி விடுகின்றனர். பிரித்துப் பார்த்தால், போலி தங்க நாணயமும், வெண்கல சிலைகளும் இருக்கின்றன. குறிப்பிட்ட மொபைல்போன் எண்ணை தொடர்புகொண்டால், எதிர்முனையில் பேசுவோர் எவ்வித பதிலும் கூறாமல் இணைப்பை துண்டிக்கின்றனர். சமீபத்தில், இத்தகைய மோசடி அழைப்புகள், விளாங்குறிச்சி, பீளமேடு, ராமநாதபுரம் பகுதிகளில் வசிப்போருக்கு அதிகளவு வந்துள்ளன. ஏமாந்தவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏமாந்த பலர், அவமானம் கருதி, வெளியில் சொல்லாமல் இருந்து விடுகின்றனர்.

தபால் அதிகாரிகள் கூறுகையில், ''இதுபோன்ற நூதன மோசடிகள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. வாடிக்கையாளர்கள் இச்சமயங்களில் உடனே, சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திலும், தபால் வாடிக்கையாளர் சேவை மையத்தின் 0422 - 2397352 என்ற எண்ணிலும் தெரிவிப்பது அவசியம். இதன் மூலம், அவர்கள் செலுத்திய தொகையை திரும்பப்பெற வழிவகை செய்யப்படும். இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும்,'' என்றனர்.

No comments:

Post a Comment