Thursday, November 20, 2014

பணவிடை பட்டுவாடா செய்யும் போது பணம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

First Published : 20 November 2014 04:55 AM IST
பணவிடை (மணியார்டர்) பட்டுவாடா செய்யும் போது, அஞ்சல் ஊழியர்கள் பணம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என, சென்னை மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அஞ்சல் வட்டத்தில், 20 தலைமை அஞ்சலகங்கள், 551 துணை அஞ்சலகங்கள், 1,646 கிளை அஞ்சலகங்களின் மூலமாக பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அஞ்சலக சேவைகளுக்கு, குறிப்பாக முதியோர் உதவித் தொகை, பணவிடை ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பெறும்போது, அன்பளிப்பு என்ற பெயரில் பணமாகவோ, பொருளாகவோ அஞ்சலக ஊழியர்களுக்கு வழங்க வேண்டாம்.
அஞ்சல் ஊழியர்கள் பணவிடை பட்டுவாடா செய்யும்போது பணம் கேட்பதோ அல்லது பணம் பிடித்தம் செய்து வழங்கினாலோ, அதுகுறித்து பயனாளிகள் புகார் தெரிவிக்கலாம். புகார்களை அஞ்சல் துறைத் தலைவர், சென்னை நகர மண்டலம், சென்னை-600 002 என்ற முகவரி அல்லது 044-28592877 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இணை இயக்குநர், மத்திய புலனாய்வுத் துறை, சென்னை-600006, 044-28270992 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
பயனாளிகள் தெரிவிக்கும் புகார்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார்தாரரின் விவரம், அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்.
இதுபோன்ற புகார்கள் எங்களுக்குக் கிடைக்கப்பெற்று, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பல அஞ்சல் ஊழியர்கள் இடைநீக்கமும், அவர்களில் பலர் பணியிலிருந்தும் கூட நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வாடிக்கையாளர்கள், பயனாளிகள் அஞ்சல் துறையின் வேண்டுகோளை ஏற்று, அஞ்சலக சேவைகளை மேம்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் மெர்வின் அலெக்ஸாண்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sourced By: Dhinamani

No comments:

Post a Comment