Wednesday, April 16, 2014

திருநங்கைகளை‘மூன்றாம் இன த்தவராக’ அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்கவும் உத்திரவு .



புதுடெல்லி,
திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்கவும் உத்தரவிட்டது.
பொது நல வழக்கு
இறைவனின் படைப்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவருடன், திருநங்கைகள் என்ற தனி இனத்தவரும் உள்ளனர். இவர்களது பாலின அடையாளம் குறித்து எந்தவொரு அங்கீகாரமும் சட்டப்படி கிடைக்காத நிலை இருந்து வந்தது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில், தேசிய சட்டப்பணிகள் ஆணையம் ஒரு பொது நல வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
இந்த வழக்கை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
விசாரணை முடிவில் திருநங்கையரை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், ஆண்கள், பெண்களை அடுத்து திருநங்கைகளை தனியாக மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* திருநங்கைகளும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். அவர்களுக்கும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்புகள் போன்றவற்றில் ஆண்களைப்போன்று, பெண்களைப்போன்ற சம உரிமை உண்டு.
* சமுதாயத்தில் திருநங்கைகள் துன்புறுத்தப்படுவது, பாகுபாடு பார்க்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. முன்பு சமுதாயத்தில் திருநங்கைகள் மதிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால் அந்த சூழ்நிலை மாறிவிட்டது. இப்போது அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்கள் துன்புறுத்தவும்படுகிறார்கள்.
* திருநங்கைகளுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ போலீசாரும், மற்ற அதிகாரிகளும் தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்களது சமூக, பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்களும் சமுதாயத்தில் ஒரு அங்கம்தான். அவர்களை சமூகத்தின் பிரதான இடத்துக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இந்த உத்தரவு, திருநங்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஓரினச்சேர்க்கையாளர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
திருநங்கைகள் வரவேற்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை திருநங்கைகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

Source By: Daily Thanthi

No comments:

Post a Comment