Friday, May 22, 2015

தாம்பரத்தில் மாநில அளவில் முதல்


 மூன்று இடங்களைப் பெற்ற 


மாணவிகள்

First Published : 22 May 2015 03:37 AM IST
கிழக்கு தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்லின் ஜெனிஷா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
 ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று இருக்கும் இவர் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
 மாணவி ஜாஸ்லின் ஜெனிஷாவின் தாயார் திருப்போரூர் அருகில் உள்ள செம்பாக்கம் அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். தந்தை ஜெயக்குமார் சாப்ட்வேர் நிறுவன அதிகாரியாக பணியாற்றுகிறார்.
 முதலிடம் பெற்றுள்ள ஜாஸ்லின் கூறியது: வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை நன்கு கவனித்து,அன்றாடம் நடத்தும் பாடங்களை அன்றே படித்து வந்தேன். என்ன சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்களிடம் தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் கேட்டு தெளிவாகப் புரிந்து படித்தேன். உயிரியல் பிரிவில் சேர்ந்து படித்து டாக்டராகுவது எனது லட்சியம்
 என்றார்.
 மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள கிழக்கு தாம்பரம் கிறிஸ்து ராஜா பள்ளி மாணவி ஜி.பவதாரிணி 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும்,தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
 இது குறித்து பவதாரிணி பேசும்போது, மாநில அளவில் முதலிடம் பெறும் குறிக்கோளுடன் படித்து வந்தேன். பள்ளி தலைமை ஆசிரியர் சிஸ்டர் மேரி ஹெலன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் நீ நன்கு படித்து பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி உற்சாகப்படுத்தியதை மறக்கவே முடியாது. எதிர்காலத்தில் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்றார்.
 மாநில அளவில் மூன்றாவது இடத்தை கிழக்கு தாம்பரம் ஸ்ரீசங்கரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.ஐஸ்வர்யா பெற்றுள்ளார். இவர் தமிழில் 98 மதிப்பெண்ணும்,ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்ணும்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
 மேலும் சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எம்.ஜெமி டபோடைல்,மாணவர் ஹட்சன் ஹோசியாராஜ் ஆகிய இருவரும் தலா 497 மதிப்பெண்கள் பெற்று,மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

No comments:

Post a Comment