Friday, April 17, 2015

தனியார் துறை - பொது துறை பங்களிப்பு: நவீனமயமாகும் 100 ரயில் நிலையங்கள்
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும், 100 ரயில் நிலையங்களை, தனியார் துறை - பொதுத் துறை பங்களிப்பின் மூலம் மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டங்கள், மின்னணு ஏல முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியைச் சந்திப்பதால், 100 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம், தனியார் துறை மற்றும் பொதுத் துறை பங்களிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேநேரத்தில், திட்டங்களை மேற்கொள்ளும் போது, துறை ரீதியான பல பிரச்னைகளை, தனியார் நிறுவனங்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. இதை தவிர்ப்பதற்காக, மின்னணு ஏல முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ரயில் நிலைய மேம்பாட்டில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை தொழில்நுட்ப கமிட்டி ஆய்வு செய்து அனுமதி வழங்கும். அனுமதி கிடைத்ததும், அனைத்து வசதிகளுடனும் கூடியதாகவும், உலகத்தரம் வாய்ந்ததாகவும், ரயில் நிலையங்களை மாற்றும் பணியில், தனியார் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும். அத்துடன், ரயில் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில், வர்த்தக ரீதியாக சில பணிகளை மேற்கொள்ள அனுமதி தரப்படும். இந்த பணிகள் மூலம், தனியார் நிறுவனங்கள் தங்களின் முதலீட்டற்கு ஏற்ற, கணிசமான வருவாய் பெறலாம். ஒவ்வொரு வட்டார அளவிலும், கூட்டு முயற்சியில், இந்த ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருந்த, பிரதமர் மோடி, 'இந்திய ரயில்வேயில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள, பிரான்ஸ் நிறுவனங்கள் முன்வர வேண்டும்' என, அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக, இந்த ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டங்களில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் சில பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment